380 ஆண்டுகள் இறைபணியில்
தமிழகத்தில் கப்புச்சின்சபை
------------------------------------------------
தமிழகத்தில் கப்புச்சின்சபை
------------------------------------------------
தமிழக வருகை
(1291 மேலும் 1632, 1642)
13ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித அசிசி பிரான்சிஸ் (1182 – 1226) அவர்களின் அடிச்சுவட்டில் வந்தவர்கள்தான் கப்புச்சின்சபை துறவிகள் இந்தியாவிற்கு இயேசுவின் வார்த்தையை போதிக்க 1250ல் இந்தியாவிற்கு வந்த முதல் கத்தோலிக்க கிறித்தவ துறவறசபை பிரான்சிஸ்கன் சபையாகும். 1291 – 1292 வரை பிரான்சிஸ்கன் துறவிகளில் ஒருவராகிய ஜான்மோன்தே கொர்வினோ சென்னையில் உள்ள மைலாப்பூரில் 100க்கும் அதிகமானோருக்கு திருமுழுக்கு கொடுத்து கிறிஸ்தவமறையில் சேர்த்தார். 1528ல் பிரான்சிஸ்கன் சபையிலிருந்து பிரிந்து தனி அமைப்பாக கப்புசின் சபை உருவாகியது. இவர்கள் இந்தியாவில் 1632ல் பாண்டிச்சேரியில் உள்ள குருசுகுப்பத்தில் முதலில் காலடிவைத்தனர். இதன்பின் இந்தியாவில் பல இடங்களில் வேதபோதகபணியை ஆற்றினர். இவர்கள் திருத்தந்தையின் ஆளுகைக்கு உட்பட்ட விசுவாசப்பரப்புதல் சபையின் வழியாக நற்செய்திபணிக்காக வந்தவர்கள்.
1943க்கு முன் தமிழகத்தில் பணிகள்
சென்னையையும் (புனித ஜார்ஜ்கோட்டை) (1642 -1834), பாண்டிச்சேரியையும் (1632 – 1695) தலைமையிடமாகக் கொண்டு திருமறையில் மக்களைசேர்த்தல், ஆலயம் கட்டுதல், கல்விப்பணி, சமூகப்பணி, சமயநல்லிணக்கப்பணி என பல பணிகளை செய்துள்ளார்கள். இயேசு சபையினர் தமிழகத்திற்கு வருமுன்னே தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி போன்ற இடங்களில் புனித தோமையார் கிழக்கிந்திய மறைமாநிலத்தின் வழியாக போர்த்துகீசிய பிரான்சிஸ்கன் துறவிகள் பணிகள் பல ஆற்றியுள்ளனர். இவர்கள் புதுரவாதமுறைப்படி போர்த்துகல் அரசின் வழிகாட்டுதலில் மறைபணிசெய்தார்கள். சென்னையிலும், பாண்டிசேரியிலும் முதன்முதலில் கப்புசின் சபையினர் திருத்தந்தையின் நேரடி கண்காணிப்பில் தங்களது பணியினை மேற்கொண்டார்கள். 202 (1632 – 1834) வருட காலகட்டத்தில் 100க்கும் அதிகமான பிரான்சிஸ்கன் கப்புசின் சபை துறவிகள் ஐரோப்பாவிலிருந்து தமிழகம் வந்து மறைபணிபல புரிந்து இறைவனடி சேர்ந்துள்ளார்கள். 1834 க்குப் பின் 1943ல் தான் மீண்டும் கப்புசின் துறவிகள் தமிழகம் வந்தார்கள். இந்த 109 வருட கால இடைவெளியில் இவர்களின் கல்லறைகள் கூடபாதுகாக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குறிய ஒன்று. தமிழகம் வந்தவர்கள் மீண்டும் தங்கள் தாய்நாட்டுக்குப் பலர் செல்லவில்லை. இங்கே பணிசெய்து இறைவன் இயேசுவை மகிமை படுத்தியுள்ளார்கள். இவர்களில் அருட்பணி எபிரேயிம் நெவர்ஸ் க.ச. (1603 – 1695) என்பவர் மிகவும் நினைவுகூறத்தகுந்த புனிதர் என்று பலவரலாற்றுச்சான்றுகள் கூறுகின்றது.
தமிழகம் இந்திய கப்புசின் சபையின் தலைமையகம் (1963)
இந்தியா முழுவதும் பணியாற்றிய கப்புசின் துறவிகள் இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற பல நாடுகளிலிருந்து வந்தவர்கள். இவர்கள் கிறித்தவ மார்க்கத்தை போதிப்பதையே முழு நோக்கமாக கொண்டு செயல்பட்டார்கள். இவர்கள் ஆற்றிய பணிதளங்களில் பல வட இந்தியாவில் இன்று மறைமாவட்டங்களாக உள்ளன. 1922ல் இப்பணியை தொடர்ந்து செய்ய முதன்முதலில் இந்திய துறவிகளுக்கு பயிற்சி கொடுக்க நவசந்நியாசமடம் ஒன்று உத்திரபிரதேசத்தில் உள்ள முசிரியோவில் ஆரம்பித்தனர். பின்பு மங்களுருக்கு 1930ல் மாற்றினர். 1963வரை மறைபணிதலமாக செயல்பட்ட இந்திய கப்புசின் சபையின் தலைமையகம் ஒருங்கிணைந்த மறைமாநிலமாக உயர்த்தப்பட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள சாந்தி ஆசிரமத்தில் இருந்து செயல்பட்டது.
கப்புசின் சபை தமிழகத்தில் தனிமறைமாநிலமாக 1972ல் உருவாகுதல்
இந்தியாவில் ஒரேமறைமாநிலமாக இருந்த சபை 1972ல் தனது பொன்விழா ஆண்டில் (1922 – 1972) மே மாதம் 17ம் தேதி மூன்று மறைமாநிலமாகவும், ஒரு மறைபணித்தலமாகவும் உருவானது. அந்த மூன்று மறைமாநிலத்தில் ஒன்றாக தமிழக அமல அன்னை கப்புசின் மறைமாநிலம் உருவானது. அப்போது 50 துறவிகள் (21 குருக்கள், 18 சகோதரர்கள், 2 குருகுல குருமாணவர்கள், 4 முதல்வார்த்தைபாடு கொடுத்த சகோதரர்கள், 5 இளம் துறவிகள்) 7 மடங்களில் இருந்தார்கள்.
தமிழக கப்புச்சின்சபையின் இன்றையநிலை
இன்று 273 துறவிகள் (இறுதிவார்த்தைபாடு கொடுத்தவர்கள் 243, முதல் வார்த்தைபாடு கொடுத்தோர் 63, பயிற்சி நிலையில் உள்ளோர் 30, இவர்களின் குருக்கள் 144, நிரந்தர சகோதரர்கள் 10 பேர்) 25 மடங்களிலும் மற்றும் பல நாடுகளிலும் அருட்பணியாற்றுகிறார்கள். தமிழகத்தின் முதல் கப்புச்சின் சபையின் மடம் திருச்சி திருவரங்கத்தில் இருக்கும் அமலாசிரம் 1943ல் ஆரம்பிக்கப்பட்டது. இது கும்பகோணம் மறைமாவட்டத்தின் கீழ் உள்ளது. நற்செய்திபணி, பங்குப்பணி (16), சமூகப்பணி(7), வேதபோதகப்பணி (ஜிம்பாபுவே, புர்கினோ, பாசோ), நலிவுற்ற பழமையான கப்புசின் மறைமாநிலங்களை திடப்படுத்துதல் (பிரான்ஸ், கனடா, இத்தாலி), பயிற்றுவிப்பு பணி, பொதுநிலை பிரான்சிஸ்கன் சபையை வழிநடத்துதல், ஆற்றுப்படுத்துதல், வளைகுடா நாடுகளில் ஆன்மீகப்பணி, போன்ற பணிகள் தமிழக கப்புசின் சபை துறவிகளால் செய்யப்படுகிறது. 11துறவிகள் தங்களது மேற்படிப்புகளை வெளிநாடுகளில் மேற்கொள்கிறார்கள். ஒருசிலர் தனது பணியை அகில உலக கப்புச்சின் தலைமையகத்திலும், பிறஇடங்களிலும் தாய்திருச்சபைக்காக பணியாற்றுகின்றார்கள் கடந்த 6 வருடங்களாக அருட்பணி அல்போன்ஸ் சார்லஸ் க.ச. அவர்கள் கப்புச்சின் சபையில் அதிபராக பணியாற்றிகொண்டு இருக்கின்றார்கள்.
சில சிறப்பு நிகழ்வுகள்
தமிழகத்தில் 1632 -2012 வரை 380 வருடங்கள் பணியாற்றியூள்ளனர். 1943க்கு பின்தான் தமிழக கப்புக்சின் சபையில் வளர்ச்சியில்; அக்கறை காட்டியுள்ளனர். அதற்குமுன் மறைபரப்பு பணியை ஆற்றி பின் தல ஆயரிடம் அல்லது பிறகத்தோலிக் துறவறசபையிடம் பணித்தலத்தை ஒப்படைத்துள்ளார்கள். தமிழகத்தின் முதல் கப்புச்சின் குரு அருட்பணி எவூசேபியூஸ் இன்றும் நாகர்கோவில் அசிசி ஆசிரமத்தில் உள்ளார். இவர் 1949ல் ஏப்ரல் மாதம் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். தமிழகத்தின் முதல் கப்புச்சின் துறவி அருட்சகோதரர் காசியான் (1907-1966) நாகர்கோவிலை (இரவிபுதூர்கடை) சார்ந்தவர். தனது முதல் வார்த்தைபாட்டை 1934ல் கொடுத்தார். இவர் கேரளாவில் கொல்லம் கப்புச்சின் சபை கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சார்ந்த அருட்பணி ஜான் அந்தோனி க.ச அவர்கள் தமிழகத்திலிருந்து முதன் முதலில் அகில உலக சபை அதிபரின் 2வது ஆலோசகராக உரோமையில் பணியாற்றுகின்றார். அருட்பணி இருதயசாமி க.ச. அவர்கள் பொதுநிலை பிரான்சிஸ்கன் சபையின் அகில உலக ஆன்மகுருவாக செயல்பட்டுள்ளார். கப்புச்சின் சபையினர் வழிநடத்தும் மெய்யியல் கல்லூரியிலும் (நீலகிரி, கோத்தகிரி) இறையியல் கல்லூரியிலும் (திருச்சி, சமயபுரம்) கப்புச்சின் சபையினர் மட்டும் அல்லாது மற்ற சபையினரும் மறைமாவட்டத்தினரும் பயின்று குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இம்மறைமாநிலத்தில் இறைவனடி சேர்ந்த 30 கப்புச்சின் துறவிகளில் அருட்பணி ஜான் பீட்டர் (1941 – 1979) எடுத்துக்காட்டான நல்லதொரு வாழ்வு வாழ்ந்தவர் மேலும் அவரது கல்லறையில் அவ்வப்போது புதுமைகளும் நடக்கின்றது.
தமிழகத்தில் புதிய இருமறைமாநிலம்
2012 ஏப்ரல் 25
வருகின்ற ஏப்ரல் மாதம் 25ம் தேதி திருச்சி அமலாசிரமத்தில் கப்புச்சின் சபைதலைவர் அருட்திரு மௌரோ ஜோரி க.ச அவர்கள் தலைமையில் திருப்பலியும் அதுசமயம் புதியதாக பொறுப்பேற்கும் இருமறைமாநிலத்தின் அதிபர் மற்றும் ஆலோசகர்களையும் அறிவிக்க இருக்கின்றார். தமிழகத்தில் உள்ள பதினெழு மறைமாவட்டங்களில் வடமறைமாநிலத்தில் 9 மறைமாவட்டங்களும், தென்மறைமாநிலத்தில் 8 மறைமாவட்டங்களும் உள்ளடங்கும். வடமாநிலம் திருட்சி கதீட்ரல் பங்கில் உள்ள ஞானாலயத்தை தலைமையாக கொண்டு அமல அன்னை பாதுகாவலிலும், தென்மாநிலம் மதுரை உயர்மறைமாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பங்கில் உள்ள கப்புச்சின் ஆசிரமத்தை தலைமையகமாக கொண்டு அமைதியின் அரசி பாதுகாவலிலும் வளர உள்ளது. தென்மாநிலத்தில் 85 இறுதிவார்த்தைபாடு கொடுத்த துறவிகளும் இருக்கிறார்கள்.
அருட்பணி அந்தோனிசாமி தோமை க.ச
திருஅவை வரலாற்று பேராசியர்
பிரான்சிஸ்கோ, சமயபுரம், திருச்சி - 621 112
அருட்பணி அந்தோனிசாமி தோமை க.ச
திருஅவை வரலாற்று பேராசிரியர்
பிரான்சிஸ்கோ, சமயபுரம், திருச்சி - 621 112
0 comments:
Post a Comment