நல்லாசிரியர் இயல்
1.நல்லாசிரியர்.
1.அகர உயிரோர் அறிவிறைவர் ஆசார்;
பகரினவர் நல்லாசார் பார்.
பொருள்: 'அ' எனும் உயிரெழுத்து போல எல்லா உயிர்களிலும் கலந்து விளங்கும் இறைவன் ஆசிரியர். உலகில் அவரே நல்லாசிரியர் எனச் சொல்லுக.
2.எண்ணுவன எண்ணி இயம்புவன நண்ணும்சீர்
கண்ணனையர் நல்லாசார் காண்.
பொருள்: எண்ணத் தக்கன எண்ணி, சொல்லத் தக்கன விரும்பும் கண்ணை ஒத்த சிறப்புடையவரே நல்லாசிரியர் காண்க.
3.வாடுபயிர் கண்டுள்ளம் வாடுவள்ளல் ஒத்துவாழ்
தேடரியார் நல்லாசார் தேடு.
பொருள்: வாடிய பயிரைக் கண்டவுடன் வாடிய வள்ளலாரைப் போன்று வாழும் தேடுதற்கு அரியவர் நல்லாசிரியர் அவரைத் தேடுக.
4.கற்பன கற்றுவழி நிற்பவர் என்றென்றும்
நற்பண்பின் நல்லாசார் நாடு.
பொருள்: கற்க வேண்டிய கலைகளைக் கற்பவரும், கற்றவழி நிற்பவரும் என்றும் நற்பண்பின் நல்லாசிரியர் ஆவார்; அவரை நாடுவீர்!
5.பெறிவாயில் ஐந்தும் புகழாய்ச் சமைத்து
நெறிநிற்பார் நல்லாசார் நேர்.
பொருள்: ஐம்பொறிகளின் நெறியைப் புகழ் அடையும்படி பக்குவப்படுத்தி நன்னெறி நிற்பவரே நல்லாசிரியர் அவரைச் சேருவீர்.
6.தன்னலம் நீக்கி பிறர்நலம் காக்குமெழில்
நன்னலத்தார் நல்லாசார் நள்.
பொருள்: தன்னலம் தள்ளி, பிறர்நலம் காத்திடும் அழகிய நல்ல நடத்தையர் நல்லாசிரியர் அவரை நாடுக.
7.ஏற்றிக் கரைசேர்க்கும் தோணியாய் மாண்கரை
ஏற்றுவார் நல்லாசார் நள்.
பொருள்: கரைசேர்க்கும் தோணியாக உலகரை (மாணவரை) ஏற்றிக் கொண்டு சிறப்புடைய கரையில் ஏற்றும் பண்பாளர் நல்லாசிரியர் அவரை நாடுக.
8.படிக்கும் படியளித்து பண்பேணி யாகப்
படிதிகழ்தல் நல்லாசார் பாங்கு.
பொருள்: படிக்கும்படி அருளிச் செய்து பண்புடைய ஏணியாக உலகில் திகழ்பவர் நல்லாசிரியர் இது அவரின் பண்பாகும்.
9.கல்விக் கடல்கடைந்து காணுண்மை மாணவர்க்கு
நல்குவார் நல்லாசார் நந்து.
பெருள்: கல்வியாகிய அமுதுக் கடலைக் கடைந்து காணும் உண்மைகளை (நிலைத்தவற்றை) வழங்குபவர் நல்லாசிரியர் ஆவார் அவரை வேண்டிச் சேர்மின்.
10.ஒன்றே இறையென்றும் ஒன்றே குலமென்றும்
நன்றிருப்பார் நல்லாசார் நள்.
பொருள்: இறைவன் ஒருவன் இனமும் ஒன்று என்று நன்கு நிலைத்திருப்பார் நல்லாசிரியர்; அவரை விரும்புக. (தொடரும்..)
மூலமும் கருத்துரையும் :
நல்லாசிரியர் பேரா. பூவை. சு.செயராமன்.
தமிழ்த்துறைப் பேராசிரியர், மீனாட்சி இராமசாமி (மெரிட்டு) கல்வியியல் கல்லூரி, தத்தனூர்.
தொடர்பு எண்: 9788031886
0 comments:
Post a Comment