நல்லாசிரியர் இயல்
3.இவர் ஒப்பார் ஆசிரியர்.
21.அறிவே இறையென்பார் அவ்வழிச்சீர் கூட்டும்
இறையாசான் என்றே அறி.
பொருள்: அறிவே இறைவனென்று சொல்லுவார். அவ்வழியில் அறிவுச் சீரைக் கூட்டும் இறைவனே ஆசிரியன் என்று அறிக.
22.அன்புச்சீர் கூட்டி அறிவுப்பால் ஊட்டலால்
அன்னைநேர் ஆசான் அறி.
பொருள்: அன்பின் சிறப்பைக் கூட்டி, அறிவாகிய பாலூட்டும் தாயை ஒத்தவன் ஆசிரியன் என்று அறிக.
23.ஒப்பின்றி மாண்பாய் உவந்துநெறி சேர்ப்பிக்கும்
அப்பன்நேர் ஆசான் அறி.
பொருள்: ஒப்பின்றி மாட்சிமையுடன் மகிழந்து, நன்னெறி சேர்த்து வைக்கும் அப்பனை ஒத்தவன் ஆசியன் அறிக.
24.பொறிவழி செல்லாப் புலன்னெறி காக்கும்
நெறியறிஞன் ஆசான் அறி.
பொருள்: ஐம்பொறிகளில் செல்லாமல் புலன்களை ஒழுக்கத்தில் காக்கும் நெறியாளனாம் அறிஞனே ஆசிரியன் அறிக.
25.சால்பாலே சால்புணர்ந்து சால்பெனும் சால்பளிக்கும்
சால்பானே ஆசான் அறி.
பொருள்:சான்றாண்மைப் பண்பாலே, சான்றாண்மையை உணர்ந்து, சான்றாண்மை என்னும் சிறப்பினை அளிக்கும் சான்றோனெ ஆசிரியன் அறிக.
26.எவ்வுயிர்க்கும் அன்புசெய்து எல்லார்க்கும் கல்விஈயும்
செவ்வியுள்ள அந்தணன்ஆ சான்.
பொருள்: எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டி, எல்லோர்க்கும் கல்விக்கொடை ஈயும் சிறப்பியல்பு உள்ள அந்தணனே ஆசிரியன் ஆவான்.
27.முன்னிச்சீர் காத்து முறைதரும் செவ்விய
மன்னவனே ஆசான் அறி.
பொருள்: வருவது முன்னதாக அறிந்து, மக்களின் சிறப்பைக் காத்து, அறம் நிலைக்கச் செய்யும் மன்னவனே ஆசான்; இஃது அறிக.
28.சரக்கைச் சிறப்பாக்கி தக்கார்க்(கு) எளிதாய்த்
தரவீய் வணிகன் ஆசான் அறி.
பொருள்: விற்பனைப் பொருளைச் சிறப்புடையது ஆக்கி, உரியவர்க்கு எளிதாகத் தந்துதவும் வணிகனும் ஆசிரியன் அறிக.
29.உள்ளநோய் போக்கி உடனிருந்து காத்தளிக்க
உள்ளும் மருத்துவன்ஆ சான்.
பெருள்: உள்ள நோயைப் போக்கி, அருகிருந்து பாதுகாப்பளிக்க எண்ணும் மருத்துவன் போன்றவன் ஆசிரியன்.
30.சிதறிக் கிடைபொருளைச் சேர்த்துபொருள் ஆக்க
உதவுதச்சன் ஆசான் உணர்.
பொருள்: சிதறுற்றுக் கிடந்த பொருளைச் சேர்த்து நன்பொருளாக உருவாக்க உதவும் தச்சனைப் போன்றவன் ஆசிரியன் என்று உணர்க. (தொடரும்..)
மூலமும் கருத்துரையும் :
நல்லாசிரியர் பேரா. பூவை. சு.செயராமன்.
தமிழ்த்துறைப் பேராசிரியர், மீனாட்சி இராமசாமி (மெரிட்டு) கல்வியியல் கல்லூரி, தத்தனூர்.
தொடர்பு எண்: 9788031886
0 comments:
Post a Comment